``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-
மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.
No comments:
Post a Comment