மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது. இப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்தி அல்லது ஏதாவது ஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். காலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளி முதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர் உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment