புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு மாணவன் ‘பளார்’ விட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில், பள்ளி மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ரோடுகளில் விரட்டி விரட்டி அடித்துக் கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் பலத்த காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களே ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். கடந்த 23ம் தேதி, திருப்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு, ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மாணவன் ஒருவன் புத்தகம் எடுத்து வரவில்லை. இதை அறிந்த ஆசிரியை அந்த மாணவனை கண்டித்ததோடு, அவன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியையின் கன்னத்தில் திருப்பி ‘பளார்’, ‘பளார்’ என அறைந்துள்ளான்.
இதில் ஆசிரியைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment