தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.
சொந்த ஊர் : தற்போது பள்ளிக்கல்வி செயலகத்தில், புதிய விதிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கமான விதிகளில், பல மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பல ஆசிரியர்கள், தங்கள் சொந்த
ஊர் கொண்ட மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் முகாமிட்டு, 'ஓபி' அடிக்கும் நிலையை மாற்றலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, கட்டுப்பாடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்தாய்வு : அதேபோல், பொதுத் தேர்வு தேர்ச்சி மற்றும் கற்றல் அடைவு தேர்வுகளில், பின் தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரியில்,ஆசிரியர்கள் பணியிடம் காலி ஏற்படாதவாறு, முழுவதும் நிரப்பும் வகையில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிகிறது. மாணவர் எண்ணிக்கையை விட அதிக அளவில் ஆசிரியர்கள் கொண்ட, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர்
உள்ளிட்ட மாவட்ட ஆசிரியர்களுக்கு, வட மாவட்டங்களில் பணிமாற்றம் வழங்குவது குறித்தும் விதிகளில், குறிப்பிட்ட அம்சங்கள் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. மேலும், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன் எந்த விதமான, மறைமுக இடமாறுதலும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி முடியும் போது, கவுன்சிலிங்கை துவங்கலாம் என்றும் பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment