தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை குறித்து, சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதம் நடத்திக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என கல்வி உரிமைக்கான பாதுகாப்புக் கூட்டமைப்பின் (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்பாளர் நா.மணி கூறினார்.
சென்னையில் அவர்திங்கள்கிழமை நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:- 23 ஆசிரியர், மாணவர்களின் சங்கங்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்த அமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு அளித்துள்ள 200 பக்கப் பரிந்துரைகளில் பல அம்சங்கள் விவாதத்துக்குரியன.
எனவே, கல்வியாளர்களையும் உள்ளடக்கிய குழு அமைத்து வரைவு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் கருத்துக் கேட்டறிய 3 மாத கால அவகாசம் வேண்டும். இதற்காக புதிய வரைவு கொள்கை குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவறிக்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால், அதை எதிர்த்து பிரசாரம் செய்வோம்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-இல் திருச்சியில் 3,000 பேரைத் திரட்டி கோரிக்கை மாநாடும், 30-இல் சென்னை லயோலா கல்லூரியில் கருத்தரங்கமும் நடைபெறும் என்றார். பேட்டியின்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் மோசஸ் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment