தமிழகத்தில் தொடங்கப்பட்ட 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன்முதலாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டப்பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் திட்டத்தின்கீழ் கல்வி அளிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு செயல்வழிக் கற்றல் என்ற பாடத்திட்டத்தை எளிமையான செயல்வழிக் கற்றல் என்று மாற்றப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக் கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 தொடக்கப்பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றப்பட்டது.
2014-2015 கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 750 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கற்றலை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. ஆங்கில செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரித்தன. ஆனால் தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் அமல்படுத்தப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே, ஆங்கில வழிக்கல்வியை கற்பித்து வருகின்றனர். கூடுதல் பணி சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழிக்கல்வி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி பாடங்களை கற்க முடியாமல் போகிறது. இதனால் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறுகின்றனர் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
No comments:
Post a Comment