தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை ஆய்வு செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் வாசிப்புத் திறன், கணிதத்தில் கூட்டல், கழித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் தர மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது. வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தல், மாணவர்களின் எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகளை எழுதுதல் மற்றும் எளிய கணித முறைகளில் அடிப்படைத் திறன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment