மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறையின் நெடும் பயணம் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. வேத கல்வியாகத் தொடங்கி, காலம்தோறும் சீர்திருத்தங்கள், பல்வேறு திணிப்புகளைக் கடந்து, காலனியாதிக்கக் காலத்தில்தான், கல்வி என்பது அனைத்து சமூகத்தினருக்குமானது என்ற எண்ணம் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியது.
கல்விக்குச் செய்யும் செலவுக்கு அழிவு என்பதே இல்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த சென்னை மாகாண ஆளுநர் தாமஸ் மன்றோவின் காலத்திலும்கூட, சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் இருப்பவருக்கு கல்வியைக் கொடுத்துவிட்டால் அவர்களிடம் இருந்து அது பரவி கீழ்நிலையில் இருப்பவர்களையும் அடைந்துவிடும் என்றே நம்பப்பட்டது.
1835-ல் ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையை வகுத்த மெக்காலே பிரபுகூட, நிறத்தாலும், உருவத்தாலும் இந்தியராக இருந்தாலும் குணத்தாலும், அறிவாலும் ஆங்கிலேயராக இருக்கக் கூடிய ஒரு வர்க்கத்தையே உருவாக்கும் எண்ணம் கொண்டவராகவே இருந்தார்.
இவ்வாறு சிலரின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டு எடுத்துச் செல்லப்பட்ட கல்வி, சமூகத்தில் வாழும் அடித்தட்டு ஏழை, எளிய, ஒதுக்கப்பட்டவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய பொதுவான பார்வை நிலைக்கு மாற மேலும் சில பத்தாண்டுகள் தேவைப்பட்டன.
அனைவருக்குமான கல்விக்கு முக்கியத்துவம் வேண்டும் என்ற கோரிக்கை 1890-களில் மிகுந்த எதிர்ப்புகளுக்கு இடையே ஜோதிராவ் புலே போன்றவர்களிடம் இருந்து எழுந்தது.
அனைவருக்குமான தொடக்கக் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் ஒரே எண்ணம், எல்லோரும் பள்ளியை நோக்கிச் சென்றுவிட்டால், இதர வேலைகளை யார் செய்வது என்பதாகவே இருந்தது. அரசியல் சாசனத்தில்கூட கட்டாயமாக கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்ற பிரிவில் சேர்க்கப்படாமல், அது வழிகாட்டும் நெறிமுறைகளில் மட்டுமே கடந்த 2009 வரை இருந்து வந்தது.
அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மேலவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மசோதா நிறைவேறிய போது அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே வெறும் 60-க்கும் கீழ்தான் என்று அறிகிற போது, ஆளும் வர்க்கமும், அதன் அங்கத்தினரான அரசியல்வாதிகளும் பொதுக் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடிகிறது.
1968-ல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அனைவருக்கும் சம வாய்ப்பைக் கோரியது. இருப்பினும், 1986-இல் உருவாக்கப்பட்ட முதலாவது புதிய கல்விக் கொள்கைதான் இந்தியாவில் கல்விப் புரட்சிக்கு (?) வித்திட்டது. புற்றீசல்போல தோன்றிய தனியார், சுயநிதிப் பள்ளிகள், மத்திய அரசின் நவோதயா, கேந்திரிய வித்யாலயங்கள் யாவும் கல்வியை ஓர் அடிப்படை உரிமை என்பதில் இருந்து மெல்ல மாற்றி, வணிகமயமான, ஆடம்பரத்தைப் பறைசாற்றும் பொருளாக மாற்றத் தொடங்கின.
தொடக்கக் கல்வியைக்கூட முழுக்க தாய் மொழியில் பெறுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் இந்திய கல்வி அளித்திராத இந்த நிலையில்தான், இந்தியாவின் புகழ் வாய்ந்த தொன்மையை அறிவது, குடிமைப் பண்பு, சகிப்புத்தன்மை, பன்னாட்டுக் குடிமைப் பண்பு போன்றவற்றை உருவாக்குவது போன்ற கோஷங்களை முன்வைத்து தேசிய கல்விக் கொள்கை- 2016 எழுந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான சில விவாதத் தலைப்புகளை கடந்த 2015 ஜனவரியில் வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்தத் தலைப்புகளில் நாடு முழுவதிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியும், 29 ஆயிரம் பேரிடம் கருத்துகளைப் பெற்றிருப்பதாகவும் பின்னர் கூறியது.
மேலும், இந்தக் கருத்துகளைத் தொகுத்து அறிக்கையாக வழங்க 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டாலும், அதில் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது.
இந்த நிலையில், அந்த அமைச்சகம் தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள் என்ற தலைப்பில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தகவல்களை வெளியிட்டது. இதன் மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் ரகசியமாகவே இருப்பதும், அதன் முன்மொழிவுகளில் உள்ள பெரும்பாலான கருத்துகளும் தங்களுக்கு பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
கடந்த ஆண்டு வெளியான விவாதத் தலைப்புகளிலேயே தற்போதைய கல்வி முறையின் அடிப்படைத் தன்மையையும், நோக்கத்தையும் மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதை ஓரளவு உணர முடிந்தது. ஆனால், மக்களின் கருத்தை அறிந்து கொள்ளாமலேயே அவசர அவசரமாக, ஒரே ஒரு கல்வியாளரை மட்டுமே உள்ளடக்கிய குழு தயாரித்த அறிக்கை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.
அந்த அறிக்கையின் ஆபத்துகளைத்தான் நாங்கள் இப்போது மக்களுக்கு விளக்கி வருகிறோம். அந்த அறிக்கையானது பொதுமக்களுக்கான பரிவுடன் உலகப் பார்வையுடன் ஒத்துப்போகும் தீர்வுகளை முன்வைக்காமல், ஒரு நிர்வாகியின் சிந்தனைப் போக்கில் இருந்து கல்வியைப் பார்ப்பதாக உள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் முன்பருவம் முதல் மேல்நிலைக் கல்வி வரை பெறுவதை தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்ய வேண்டும். ஆனால், கல்வி அமைப்பு இப்போது சீர்குலைந்திருப்பதற்கான காரணங்களை அது புரிந்து கொள்வதற்காகத் தரப்பட்டுள்ள பல குறிப்புகள் மிகவும் பொதுவானவையாகவே உள்ளன.
கல்வித் துறையின் முக்கிய சவால்கள் என்ற அத்தியாயத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்பதை முதலில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், ஆசிரியர்கள் தொல்லை தரக் கூடிய ஊழியர்களாகவும், சந்தேகத்துக்குரியவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.
அதுபோல, கல்வியின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசுகளே காரணம் என்பதாகவும், இந்த பிரச்னைகளை தீர்க்கும் சக்தி மத்திய அரசிடம் மட்டுமே இருப்பதாகவும் பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.
மாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக்கத் திட்டமிடும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர, வேலைவாய்ப்பு பெறும் தன்மை குறித்து திரும்பத் திரும்ப கூறப்படுவது, மனித வளத்தை வெறும் உற்பத்தி சக்தியாக மட்டும் பார்க்கும் போக்கு, கற்றலின் திறனை வெளிப்படுத்த முடியாத மாணவர்களை தொழில் கல்விக்குத் தள்ளிவிடுவது, மேல்தட்டு வர்க்கத்தினரை இந்திய கல்விச் சந்தையின் அதிகாரிகளாக மாற்றுவது, சம்ஸ்கிருதம், வேதம், புராண மரபுகளைக் கற்பித்து, மக்களின் சிந்தனையை நூறாண்டுகளுக்குப் பின்தள்ளுவது எனப் பல புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும் களமாகவே அது உள்ளது என்கிறார் அவர்.
சந்தேகமின்றி இந்தியாவுக்கு புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது. ஆனால், அது கல்வித் துறையில் நீண்டகாலமாக உள்ள பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி. "பல துறைகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கல்வியில் பெரும் தோல்வி அடைந்துள்ளது. ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி முறை உள்ளிட்டவையே இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதாக புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.
அதேபோல, புதிய தலைமுறைக்கான வழிகாட்டல், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிகளைக் காட்டுவதாகவும், நாட்டையும், மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லக் கூடிய புதிய பார்வையை அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் அது, சமத்துவ வாய்ப்புகளை அழிப்பதாகவோ, சமூகப் பிளவை உண்டாக்குவதாகவோ, அறிவியல்பூர்வமான, ஜனநாயக நெறிமுறைகள், பொதுக் கல்வி அமைப்பு முறை போன்றவற்றை சிதைப்பதாகவோ, குலக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதாகவோ, பன்னாட்டு நிறுவனங்களுக்கான கூலிப் பட்டாளங்களை உருவாக்குவதாகவோ இருந்துவிடக் கூடாது' என்றார் அவர்.
No comments:
Post a Comment