வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஸ்டேட்பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட 5 வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதே போல் வராக்கடன் வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாரத்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து திட்டமிட்டப்படி நாளையும், நாளை மறுநாளும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வேலைநிறுத்தம் காரணமாக வங்கி பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment