- மாறி வரும் விலைவாசிக்கேற்ப மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன்களை மத்திய அரசு நியமித்து வருகிறது. அந்தந்த காலகட்டத்தின் வாழ்க்கை செலவினங்களை சீராய்வு செய்யும் இந்த சம்பள கமிஷன், கால மாற்றத்துக்கேற்ப அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டிய புதிய சம்பளம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்கும்.
இதன் அடிப்படையில் மாநில அரசுகளும் இதற்கு சற்றேறக் குறைய தங்களது ஊழியர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்கும். கடைசியாக அமைக்கப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், அதை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் கடந்த 2006-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இதேபோல், 2016-ம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பாக பரிந்துரை செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. செயலாளராக மீனா அகர்வால், நிரந்தர உறுப்பினராக எண்ணை துறை செயலாளர் விவேக் ரயே, பகுதிநேர உறுப்பினராக ரதின் ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சம்பள திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கமிஷன் வழங்கும் பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும், அவர்களை தொடர்ந்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான மாநில அரசு ஊழியர்களும் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment