மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்கிட, 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:
பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மாநில அரசின் நிதி மூலமாக நிறைவு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துள்ளது.
நலத்திட்டங்களுக்காக ரு.1,631 கோடி: இதற்காக 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக ரூ.1,631 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
1 கோடியே 11 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.264 கோடி.
77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.106 கோடி.
20 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக ரூ.323 கோடி.
46 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைகள் வழங்குவதற்காக ரூ.409 கோடி.
90 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்குவதற்காக ரூ.120 கோடி.
77 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்காக ரூ.120 கோடி.
9.39 லட்சம் மாணவ, மாணவியருக்கு வரைபடப் புத்தகங்கள், ஜியாமென்ட்ரி பாக்ஸ் வழங்குவதற்காக ரூ.6.77 கோடி.
31 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக ரூ.216 கோடி.
மலைப் பகுதிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ, மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க ரூ.3.71 கோடி.
36 லட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்க ரூ.56 கோடி.
இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,100 கோடி: கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 22 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.1,100 கோடியில் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 5.5 லட்சம் லேப்-டாப் வழங்கப்படும்.
பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்ய ரூ.250 கோடி: வரும் நிதியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்ய நபார்டு வங்கியின் மூலம் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு ரூ.384 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைநிற்றலைக் குறைப்பதற்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment