தமிழக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, கடந்த 1-ஆம் தேதி முதல் அதற்கான பணிகளைத் தொடங்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 22-ஆம் தேதி முதல் இந்தப் பணியில் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியது:
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத் திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், புத்தகப்பை ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், தனியார் பள்ளிகளில் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதை எடுத்துக் கூறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment