மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை கட்டாயமாக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.2 கோடி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறையில் புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு பரவலாக வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வகையான பள்ளிகளிலும் உடற்கல்விக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. உடற்கல்வி பாடவேளைகளில் பிற வகுப்புகளை நடத்துவதால் மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இதனால் விளையாட்டில் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிப்பதை தவிர்த்து, மாணவர்கள் கட்டாயம் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக் கல்வித் துறைஅறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment