தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வரும் ஏப்.8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 2019 மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், அந்தத் தேர்வுகளில் தோல்வியுறும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் படித்த பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஜுன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் ஏப்.8-ஆம் தேதி முதல் ஏப்.12-ஆம் தேதி வரையிலான நாள்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment