எப்படி நடக்கிறது சின்னம் ஒதுக்கீடு ?
இந்தியாவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம் கட்சிகள் உள்ளன. அதில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 57 மாநில கட்சிகளும் நிரந்தர சின்னம் கொண்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படுவதில்லை. அந்த கட்சிகள் தேர்தலில் நின்றால் சுயேட்சை வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர். தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைகள் களம் இறங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 530 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களின் கொள்கையை உணர்த்தும் வகையிலோ அல்லது மக்களை கவரும் வகையிலோ சின்னங்களை உருவாக்கி ஆணையத்தில் அனுமதி பெறுகின்றன. சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்கள் மூன்று சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். அதிலிருந்து ஒரு சின்னம் ஒதுக்கப்படும். சின்னம் ஒதுக்கிய பிறகு வேறொரு கட்சியினர் அந்த சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும் சின்னங்கள் மக்கள் அன்றாடம் புழங்கும் பொருட்களாக இருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். பூட்டு, சாவி கத்தரிகோல், டார்ச் லைட், துடைப்பம், பேன், பானை, பலூன், பழக்கூடை பெல்ட், டார்ச் லைட், கேஸ் அடுப்பு, சப்பாத்தி கட்டை ஆகியவை சின்னமாக இடம் பிடித்துள்ளன. தமிழகத்தில் களம் இறங்கும் 530 சுயேட்சை வேட்பாளர்களில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 33 பேரும் தென் சென்னையில் 31 பேரும் போட்டியிடுகின்றனர்.
அவர்களுக்கு தொலைபேசி, மின்கம்பம், காலிபிளவர், கப் அண்ட் சாசர், பொரிக்கும் சட்டி, வேர்க்கடலை, செருப்பு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சின்னங்களுக்கு வாக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வேட்பாளர்கள் கருதுவதால் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் வீட்டு உபயோக பொருட்களையே பெற்றுள்ளனர். சில வேட்பாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியதாக ஆணையம் கூறியுள்ளது. ஏசி, பேஸ்ட் வாக்கும் கிளீனர் போன்ற 200 க்கும் மேற்பட்ட சின்னங்களை தேர்வு செய்ய சுயேட்சைகள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிதாக சின்னம் கேட்பவர்களுக்கு உயிருடன் உள்ள விலங்குகளையோ பறவைகளையோ ஒதுக்கப்படுவதில்லை.
ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற சின்னத்தை வாங்கியவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலில் 1950 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, மக்களிடம் சின்னங்களை கொண்டு செல்வது பெரும் சவாலாகவே இருந்துள்ளது. சின்னங்களை மக்கள் எளிதாக நினைவு வைத்துக் கொள்ளும் வகையில், அப்போது ஆணையத்தில் பணியாற்றிய எம். எஸ். சேத்தி ( M. S. Sethi) என்கிற ஓவியர் உருவாக்கியதுதான் நாம் அழுத்தும் ஒவ்வொரு சின்னமும். அவரது பாணி சின்னங்களையே இப்போதும் உருவாக்கி வருகிறது தேர்தல் ஆணையம். சின்னங்கள் எளிமை மிக்கதாக உள்ளன. ஆனால் தேர்தல்தான் ஒவ்வொரு முறையும் கடும் சவாலாக மாறிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment