இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 02, 2018

பள்ளிக் கல்வித் துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: விருப்ப கலந்தாய்வுக்கு உத்தரவு


ஆசிரியர் அல்லாத பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து வகைப் பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தக்க வகையிலும், அனைத்து அலுவலகங்களும் எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 1.8.2018 அன்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு (இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை) ஆக.4-ஆம் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி இட மாறுதல் வழங்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நடைமுறைகளைப் பின்பற்றி...: இந்த மாறுதல் கலந்தாய்வு எந்தவிதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாளர்களைப் பெரிதும் பாதிக்காத வகையில் நடத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே மாறுதல் வழங்க வேண்டும். இடமாறுதலுக்கு சில நடைமுறைகளைப் பின்பற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை...: தற்போதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை வேறு அலுவலகத்துக்கு கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. அரசாணையின்படி மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாக வேறு இடத்துக்கு பணியாளர்களுடன் மாற்றப்பட்டிருப்பின் அந்த அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மாறுதல் வழங்கத் தேவையில்லை. எனினும், நிர்வாகக் காரணங்களால் பணியிடத்துடன் மாற்றம் பெற்ற பணியாளர்கள் மாறுதல் கோரினால் அவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

தற்போதுள்ள பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எவருக்கும் மாறுதல் அளிக்காமல் இருக்கக் கூடாது என அதில் கூறியுள்ளார். இடமாறுதலுக்கு வரவேற்பு: இது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அதிகமான் முத்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை தலைமைச் செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது போல் 3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளிக் கல்வித் துறை நிர்வாக நலன் கருதி மாறுதல்கள் வழங்க வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது; தற்போது அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment