தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம், ஆகஸ்ட் 15 -ஆம் தேதி முதல்முறையாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்ககம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நிகழ் கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 15, நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய தேதிகளில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
மாணவர்களின் வருகை, கற்றல் -கற்பித்தல் பணிகள், அடைவுத்திறன் ஆகியவை குறித்தும், பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் -பெற்றோரின் தேவைகளை கேட்டறிதல் சார்ந்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத்தின் தலைவர் அருமைநாதன் கூறியதாவது:
அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என விதிமுறை இருந்தாலும்கூட, 95 சதவீத பள்ளிகளில் பெயரளவுக்காகவும், அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் மட்டுமே கூட்டங்கள் நடைபெற்றன. அதுபோன்ற தவறுகள் இந்தமுறை நடைபெறக் கூடாது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பள்ளி வேலைநாள்களில் இக்கூட்டத்தை நடத்தினால் வேலைக்குச் செல்லும் பெற்றோர் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், விடுமுறை நாள்களில் நடத்தப்பட வேண்டும். மேலும் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில் தங்களுக்கு வேண்டிய அல்லது அதிக நன்கொடை கொடுக்கும் நபர்களை இணைப்பதைக் கைவிடுத்து உரிய முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment