ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே, இடங்களைத் தேர்வு செய்ய முடியும். இதற்கு 5 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்-லைன் முறை மூலம் நடத்தப்பட உள்ளது.
இக்கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்கள் மூலமாகப் பங்கேற்கலாம்.
5 சுற்றுகள்: ஆன்-லைன் கலந்தாய்வு 5 சுற்றுகளாக நடத்தப்படும். முதல் சுற்றுக்கு 15,000 பேர், இரண்டாம் சுற்றுக்கு 25 ஆயிரம் பேர், மூன்றாம் சுற்றுக்கு 30,000 பேர் என ஒவ்வொரு சுற்றுக்கும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு அழைக்கப்படுவர்.
இவ்வாறு ஒவ்வொரு சுற்றில் பங்கேற்கும் மாணவர்களும் இடங்களைத் தேர்வு செய்து, இறுதி செய்ய 3 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்படும். இந்த மூன்று நாள்களுக்குள் இடங்களை இறுதி செய்துவிடவேண்டும்.
முன் வைப்புத் தொகை: கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன் வைப்புத் தொகையாக ரூ.5,000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. மாணவர்கள் ரூ. 1000 செலுத்தினால் போதுமானது.
இந்தக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே மாணவர்கள் இடங்களைத் தேர்வு அனுமதிக்கப்படுவர். இந்த முன் வைப்புத் தொகையைச் செலுத்த இடங்களைத் தேர்வு செய்யும் 3 நாள்கள், அதற்கு முன்பாக இரண்டு நாள்கள் என மொத்தம் 5 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.
பணம் திரும்பப் பெறுவது எப்படி? ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்த மாணவர், பின்னர் பொறியியல் படிப்பில் சேர விரும்பவில்லை எனில், செலுத்திய முன்வைப்புத் தொகையில் 80 சதவீதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்று இடங்கள் எதையும் தேர்வு செய்யாத மாணவர்களுக்கு, முன் வைப்புத் தொகை முழுவதுமாகத் திரும்ப அளிக்கப்படும்.
இந்தத் தொகையைப் பெற ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு முடிந்த பிறகே இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment