பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து தொடர்புடைய தனியார் பள்ளிகள் விளம்பரங்களை வெளியிடக் கூடாது. இதுகுறித்து இயக்குநர் ரெ.இளங்கோவன் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத் துறை வெளியிடவுள்ளது.
உயர் நிலைக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையிலும், பெற்றோர், பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது அரசுக்கு கொண்டு வரப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கடந்த ஆண்டு முதல் கைவிடப்பட்டது. இது அரசாணையாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விவரங்களை அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரையாக வழங்கி அதைச் செயல்படுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் ஆரோக்கியமான போட்டிச் சூழலைத் தவிர்க்கும் வகையிலும் வெளியிடப்பட்ட அரசாணையின் நோக்கத்துக்கு மாறுபட்ட வகையில் ஒரு சில மாணவர்களின் பெயர், புகைப்படம் தாங்கிய விளம்பரப் பிரசுரங்களை வெளியிடுதல், பதாகைகள் அமைத்தல், நாளிதழ், ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
இதன்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment