அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விதிகளுக்குப் புறம்பாக மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் தனியார் தொலைநிலைக் கல்வி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் எச்சரித்துள்ளது.
அரசுப் பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டுமே தொலைநிலைக் கல்வித் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும், அனுமதி பெறாத பாடங்களை நடத்தக் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ள நிலையிலும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வெளி மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான தொலைநிலைக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அனுமதி இல்லாத பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த மையங்களால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
பல பெயர்களில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வரும் தொலைநிலைக் கல்வித் திட்டங்களை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கண்ட மையங்கள் 2018-19 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்றும், அதேநேரம், தற்போது 2 ஆம் ஆண்டு, 3 ஆம் ஆண்டுகளில் படித்து வருபவர்கள் தங்களது படிப்பைத் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சில கல்வி மையங்கள் இந்த உத்தரவை மீறி மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் அனைத்து தனியார் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வெள்ளிக்கிழமை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் தனியார் மூலம் நடத்தப்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களுக்கான அங்கீகாரம் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற 304-ஆவது ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை தொடர்பான எந்த ஒரு நடைமுறையையும் மேற்கண்ட கல்வி மையங்கள் செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறும் தனியார் கல்வி மையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
No comments:
Post a Comment