பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்க வியாழக்கிழமை (மே 3) முதல் ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதள பக்கம் செவ்வாய்க்கிழமை காலையில் முடங்கியிருந்தது. பிற்பகலில் சீர் செய்யப்பட்டது. ஆனாலும், இணையதளம் அடிக்கடி முடங்கினால், வீட்டில் இருந்தபடியே ஆன்-லைனில் விரைவாக விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கத் தெரியாத மாணவர்களுக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களை கலந்தாய்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இம்மையங்களில் கட்டணமின்றி இலவசமாக சேவையைப் பெற முடியும். ஜூலை முதல் வாரத்தில் ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (மே 3) தொடங்கப்பட உள்ளது. ஆன்-லைன் விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த விவரங்கள் புதன்கிழமை (மே 2) வெளியிடப்பட உள்ளது. காலையில் முடங்கியது-பிற்பகலில் சீரானது: விண்ணப்பப் பதிவு தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், பி.இ. சேர்க்கை விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான www.annauniv.edu/tnea2018 என்ற இணையதள பக்கம் செவ்வாய்க்கிழமை காலையில் திறக்க முடியாமல் முடங்கியிருந்தது. பிற்பகலில் நிலைமை சீரடைந்தது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய பிறகு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த இணையதள பக்கத்தை திறக்க முற்படுவார்கள் என்பதால், வீட்டிலிருந்தபடியே ஆன்-லைனில் விரைவாக விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில், 'செவ்வாய்க்கிழமை சில தொழில்நுட்பப் பணிகளுக்காக விண்ணப்பிப்பதற்கான இணையதள பக்கத்தை ஊழியர்கள் ஆஃப் செய்து வைத்திருந்தனர். வேறு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.
No comments:
Post a Comment