எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு!
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு!
பொறியியல், மருத்துவம், சட்டம் ஆகிய படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிவந்த உதவித்தொகை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 1.5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயிலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு இதுவரை ஆண்டு ஒன்றுக்கு 12.5 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுவந்தது. இந்த ஆண்டு முதல் ஆண்டு ஒன்றுக்கு ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்படும். பொறியியல் படிப்புக்கான உதவித்தொகையும் 85,000-லிருந்து 70,000ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தொழில்முறை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அரசின் இந்த உத்தரவு எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டில், 1,279 கோடி ரூபாய் அரசின் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டும். அதில் பாதியளவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து கோரிய முழு அளவு நிதி வழங்கப்படவில்லை. பல மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாததால், படிப்பைப் பாதியிலேயே விட்டு விடுகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரசு இதேபோன்ற உத்தரவை வெளியிட்டது. ஆனால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அது ரத்துசெய்யப்பட்டது.
நிதி நெருக்கடி காரணமாகக் கல்லூரி அளவில் வழங்கப்படும் உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது எனத் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ.1,546 கோடியை வழங்கவில்லை. அதனால் மாநில அரசே தனது நிதியை பயன்படுத்தி கல்வி உதவித்தொகையை வழங்கிவருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment