ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிடுமாறு நீதிபதிகளிடம் வலியுறுத்துவோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்களைவலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் ஏற்கெனவே போராட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் மற்றொரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டக்காரர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். ஈரோடு, விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை, பழனி என தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் 2-ஆவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப்போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வரும் செப்.15-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக ஆஜராகவுள்ளோம். கடந்த 13 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். எங்களது நலன்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த அரசுதான் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிடுமாறு நீதிபதியிடம் வலியுறுத்துவோம்.
No comments:
Post a Comment