தமிழகத்தில் நடைபெற்று வரும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் எத்தனை ஆசிரியர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன எனக் கேள்வியெழுப்பிய உயர் நீதிமன்றம், இந்தப் போராட்டங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. செய்யாறு சிறுவெளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் காளிதாஸ் மாதக்கணக்கில் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்.
எனவே, அவர் மீது நடவடிகை எடுக்கக் கோரியும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்குத் தவறாமல் வருவதை உறுதிப்படுத்த உத்தரவிடக் கோரியும், பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வேறு பணி செய்வதை தடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டு கடந்த 27-ஆம் தேதி அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: இது போன்ற வழக்குகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்கவே பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமையை இந்த நீதிமன்றம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், இவரைப் போன்று பல மாதங்கள் பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்களால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. தற்போது நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எத்தனை ஆசிரியர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன, எத்தனை ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்துள்ளனர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர், தமிழகத்தில் மக்கள் தொகைக்கேற்ப ஆசிரியர் விகிதாச்சாரம் என்ன, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
ஊதியத்தின் விவரம் என்ன, அரசு கருவூலத்திலிருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க எவ்வளவு செலவிடப்படுகிறது, தமிழக பட்ஜெட்டில் அது எத்தனை விழுக்காடு, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எத்தனை விழுக்காடு, அவர்களின் ஆண்டு சராசரி வருமானம் எவ்வளவு, தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறதா, ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பாதிப்படைந்துள்ள பள்ளிகள் எத்தனை, போராட்டத்தைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு வியாழக்கிழமை (செப் 14) பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைப்பதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை வழக்குரைஞர் சூரிய பிரகாசம் தொடர்ந்த மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அந்த வழக்கை செப்.18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment