ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான மத்திய நிதி ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தென் மாநிலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நலத் துறை அதிகாரிகளும், செயலர்களும் பங்கேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும் பங்கேற்றார். இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதா கிருஷ்ண ராவ், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.
No comments:
Post a Comment