போலி வாக்காளர்களை நீக்க புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) தேர்தல் ஆணையம் பயன்படுத்தி உள்ளது. இதன்மூலம் தொகுதிக்கு 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மே 16ல் நடந்தது. இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கில் வாக்காளர்கள் இரட்டை பதிவாக இருப்பதாகவும், போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் புகார் கூறினர். ஆனால் தேர்தல் ஆணையம், தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் மாதம் திடீரென்று மாநிலத்தில் அனைத்து தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியல் மீண்டும் ஆய்வு செய்து போலி வாக்காளர்களை நீக்க பரிந்துரை செய்தது.
ஆனால் அதனை முழுமையாக தேர்தல் ஆணையம் நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் குறைபாடு உள்ள வாக்காளர் பட்டியலை வைத்து தேர்தலை நடத்தியது. தற்போது வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தவும், போலி வாக்காளர்களை நீக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பட்டியலில் உள்ள வாக்காளர்களை வீடுதோறும் சென்று சரிபாக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் போலி வாக்காளர்களை கண்டுபிடிக்க புதிய (மென்பொருள்) சாப்ட்வேர் தயாரித்துள்ளது.
அதில், ஒரு தொகுதியில் ஒரு வாக்காளரின் பெயர், முகவரியை பதிவு செய்தால், அதே பெயர், தந்தை பெயர், முகவரி, வயது, புகைப்படம், உள்ள போலி வாக்காளர் விபரமும், வேறு தொகுதியில் இவர்கள் இருந்தாலும் இந்த புதிய சாப்ட்வேர் மூலம் கண்டுபிடித்து விட முடியும். இந்த புதிய சாப்ட்வேர் மூலம் தற்போது ஒவ்வொரு தொகுதியில் உள்ள போலி வாக்காளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக கம்ப்யூட்டர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் வாக்காளர் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த புதிய சாப்ட்வேர் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15 ஆயிரம் 20 ஆயிரம் வரை போலி வாக்காளர்கள் இருப்பதாக இதுவரை வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போலி வாக்காளர் விபரத்தை தனியாக பட்டியல் எடுத்து வீடுதோறும் சென்று ஆய்வு செய்து நீக்க உள்ளனர். மேலும் இந்த ஆய்வின்போது, இறந்த வாக்காளர் விபரம் பெற்று அதனையும் நீக்க உள்ளனர்.
No comments:
Post a Comment