அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மத்திய கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நடப்புக் கல்வியாண்டில் கணினி வழிக் கற்றல் திட்டத்தின் கீழ் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படும் தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும்.
எனவே மாவட்ட வாரியாக மூன்று ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அந்த ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவங்களுடன் இணை இயக்குநர்(தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த விவரங்களை www.ciet.nic.in, www.ncert.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.
மாவட்ட தேர்வுக் குழு தலைவர், ஆசிரியர் சார்பான கருத்துகளைப் பரிந்துரைக்கும்போது எந்தவித புகாருக்கும், குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்படாதவர், நீதிமன்ற வழக்குகளுக்கு உட்படாதவர் என சான்றளிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment