தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவுறுத்தலால், தமிழகத்தில் 15.11.2011ல், தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் என (அரசாணை எண்: 181) உத்தரவிடப்பட்டது. இதன்படி 2012, 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013ல் நடந்த தேர்வில் அதிக எண்ணிக்கையிலான தேர்ச்சியால் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதேபோல், '90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பதில் இருந்து, அரசு சார்பில் 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு 85 சதவீதம் அதாவது, 90 மதிப்பெண்ணில் இருந்து 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி,' என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால், இதுதொடர்பாகவும் வழக்குகள் தொடரப்பட்டதால் அந்த வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.
இவ்வழக்குகளை முடித்து, தேர்ச்சி பெற்றவர்கள் பயன்பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.மேலும், 23.8.2010க்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரும் நவ.,க்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்படாதபட்சத்தில் இவர்களின் பணி நியமனத்திலும் புதிய குளறுபடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
டி.இ.டி., தேர்வில் அரசு அறிவித்த சலுகை என்பது கொள்கை முடிவு. குறிப்பாக, 5 சதவீதம் சலுகை மதிப்பெண் விஷயத்தில் அரசு ஆர்வம் காட்டாததால் நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்.சி.டி.இ.,யின் முரண்பாடான பாடத் திட்டம், தமிழக அரசின் 'வெயிட்டேஜ்' முறையும் குழப்பத்திற்கு முக்கிய காரணம். இதை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும். சிக்கலில் பள்ளிகள்: அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் டி.இ.டி., தேர்வு கட்டாயமில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியும், அதுதொடர்பாக தமிழக அரசு எவ்வித அரசாணையும் பிறப்பிக்காததால் இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனங்களும் குழப்பத்தில் உள்ளன, என்றார்.கல்வித் துறையில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment