பள்ளிகள் தொடங்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களை வரவேற்று, அவர்களுக்க நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தர வேண்டும். பள்ளிகள் தொடங்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். சுத்தமான குடிநீர், தண்ணீர், கழிப்பறை வசதிகளையும் உறுதி செய்யப்பட வேண்டும்.
திறந்தவெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், பழுதடைந்த கம்பிகள், புல், புதர்கள் இல்லாமல் இருப்பதையும், வளாகத் தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும். ஆங்கில வழிப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்தவும், பள்ளி வயது குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களை வலியுறுத்த கூட்டம் நடத்த வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment