சட்டசபை தேர்தலில், 200 ஆசிரியர்களுக்கு, இரண்டு தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன. இவை, ஓட்டு எண்ணிக்கையில் சேருமா, சேராதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டுகள் போட அனுமதி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், தேர்தல் பணிக்கான பயிற்சியில் இருந்தபோது, விண்ணப்பம் வழங்கப்பட்டு, விவரங்கள் பெறப்பட்டன. அவற்றை சரிபார்த்த பின், தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஓட்டு சீட்டு வழங்குவதில், பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டுகள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகங்களை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய பின், அவர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன.
இதன்படி, கோவை மாவட்டத்தில், கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 200 பேர், தங்களுக்கு தபால் ஓட்டு இல்லை என, கலெக்டர் அலுவலகத்தில், 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த இடத்திலேயே தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டு, அவர்கள் அங்கேயே ஓட்டு போட்டனர்.இந்நிலையில், இந்த, 200 ஆசிரியர்களுக்கும், மேலும், ஒரு தபால் ஓட்டு சீட்டு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, நேற்று முன்தினம் வந்துள்ளது. இதனால், ஆச்சரியம் அடைந்த ஆசிரியர்கள் பலர், இரண்டாவது ஓட்டையும் பதிவு செய்துள்ளனர்.
இன்று காலை, 8:00 மணி வரை தபால் ஓட்டுப்பதிவுக்கு அவகாசம் உள்ளது. சில ஆசிரியர்கள் மட்டும், தங்களுக்கு இரண்டாவது ஓட்டு சீட்டு வந்துள்ளதாக, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால், 180க்கும் மேற்பட்டோர், இரண்டாவது தபால் ஓட்டையும் பதிவு செய்துள்ளனர். இதனால், 'தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்படும்' என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment