தேர்தல் பணிகளில், ஆண், பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுச்சாவடி அதிகாரி, அலுவலர் பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், வரும் 15ம் தேதி முதல், 16ம் தேதி இரவு வரை, தேர்தல் பணியாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.
அதில், சில ஆசிரியைகளுக்கு, அவர்களது வீட்டிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு முடிந்து, மின்னணு ஓட்டுப் பெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்ப, இரவு 9:00 மணி ஆகிவிடும். அதன்பின், நகர்ப்புறம் அல்லாத மற்ற பகுதிகளிலிருந்து, வீடுகளுக்கு திரும்ப போக்குவரத்து வசதி கிடைக்காது.
பணி முடித்து, வீட்டுக்கு வந்து சேர நள்ளிரவை தாண்டி விடும் என்பதால், அவர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:தேர்தல் பணிக்கான சம்பளம், மிக குறைவாக இருந்தாலும், ஜனநாயக கடமை என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், பணி இடங்களை ஒதுக்குவதில், அதிகாரிகள் உரிய விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதனால், 80 கி.மீ., துாரத்தில், தேர்தல் பணி ஒதுக்கப்படுவதால், பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இரவில், தாமதமாக தேர்தல் பணி முடியும் நிலையில், அவர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி களை, தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை.இதேபோல், காலை 5:00 மணிக்கு, தேர்தல் பணி துவங்கும் நிலையில், இரவு 7:00 மணிக்கு முடியும் வரையில், ஆசிரியர்களுக்கு எந்த இடைவேளையும் ஒதுக்கப்படுவதில்லை.
அதனால், கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, தேர்தல் பணியில் அவர்களது கவனம் சிதறும் நிலை உள்ளது. எனவே, உரிய வசதிகள் செய்து தரவும், மாற்று பணியாளர்கள் நியமித்து, ஆசிரியர்களுக்கு சில நிமிடங்கள் இடைப்பட்ட ஓய்வு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment