தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு குறைவாக ஊதியம் வழங்குவதா என எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் வாங்க மறுத்தனர். இதனால் மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்வதில் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நேற்று 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலருக்கு சம்பளமாக ரூ.1700ம் மற்ற 4 பேரில் 3 பேருக்கு ரூ.1300-ம், பி2பி பிரிவின்கீழ் 4வது ஊழியருக்கு ரூ.600 என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷனால் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி புதுக்கிராமத்தில் எண் 175 மற்றும் எண் 176 ஆகிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
175வது வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலராக எட்டயபுரம் அருகே தலைக்காட்டுபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு அரசு ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளருமான விளாத்திகுளத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் பணியில் ஈடுபட்டார். இதுபோல் அவருக்கு உதவியாக மேலும் 4 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள் இரவு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருந்தன. இன்று அதிகாலை 5.45 மணி அளவில் கோவில்பட்டி தொகுதி மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக்கொள்ள அங்கு சென்றனர்.
அப்போது வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர் சுப்புராஜ், வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்ட சக ஆசிரியர்கள் 4 பேருக்கு சம அளவில் ரூ.1300 வழங்க வேண்டும் என்றும், பாரபட்சமாக ஒரு ஊழியருக்கு மட்டும் ரூ.600 வழங்குவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். இதேபோல தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி பணி ஆசிரியர்களுக்கு முரண்பாடு இல்லாமல் சம அளவில் ஊதியம் வழங்க வேண்டும் என்று மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்வதாக மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். ஆனாலும் அர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதுதொடர்பாக அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி வாங்கினர். இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து பெற்று தூத்துக்குடிக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment