வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிப்பதில் பணிச் சுமை ஏற்பட்டு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்க, வாக்குப் பதிவு தினத்துக்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை நிறுத்திவிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதாவது பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மே 12-ஆம் தேதியுடன் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் மே 8-ஆம் தேதியே வாக்குச் சாவடி நிலை அலுவலர்களான ஆசிரியர்களிடம் பூத் சிலிப்வழங்கப்பட்டதாம்.
இதில், ஒவ்வொரு ஆசிரியருக்கும் சுமார் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பூத் சிலிப்களை விநியோகிக்கும் பணி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், அவர்கள் வேலைக்குச் சென்று விடுவதால் பூத் சிலிப் வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், புதன்கிழமை இரவு 12 மணி வரை இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டதாகவும், இதனால் ஆசிரியைகள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:
இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள படிவங்களில் அவர்களின் வரிசை எண், பாகம் எண், உறவினர் பெயர், ஆண் மற்றும் பெண், வாக்காளர் அடையாள அட்டை எண், விடுபட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றை எழுதித் தர வேண்டிய நிலை உள்ளது.
வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது, பலர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். குறுகிய நாள்களுக்குள் இப்பணியை செய்து முடிப்பதில் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், பெண் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்புக்குத் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பே காரணம். இதற்கு, உரிய நிவாரணம் கிடைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
No comments:
Post a Comment