நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி பி.எப். வரிவிதிப்பு வாபஸ் : நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பு
பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறும்போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். கடந்த 29ம் தேதி நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏப்ரல் முதல் ேததிக்குப் பிறகு ‘தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது வரி விதிக்கப்படும் என ெதரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதை திரும்ப ெபற வேண்டும் என அவை வலியுறுத்தின. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.
அரசின் வருவாயை அதிகரிக்க இந்த வரிவிதிப்பு கொண்டு வரப்படவில்லை என்றும் மாறாக அனைவரையும் குறிப்பாக தனியார் துறை ஊழியர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேரவைப்பதே நோக்கம் என ஜெட்லி விளக்கம் அளித்தார். பிரதமர் மோடியும் இந்த வரிவிதிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சரை கேட்டுக் கொண்டார். பி.எப் திட்டத்தில் சேர்ந்துள்ள 3.26 கோடி உறுப்பினர்களில், 3.7 கோடி பேரின் மாத வருவாய் ₹15,000த்துக்கும் கீழ்தான் உள்ளது என அருண் ஜெட்லி கூறினார். முழு பி.எப். தொகையையும் எடுத்தால் 60% எடுப்புத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும் மாறாக அந்த 60% தொகை ஏதாவது பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் கூறினார்.
இந்நிலையில், மக்களவையில் நேற்று தாமாகவே முன் வந்து அருண் ஜெட்லி ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், ‘‘பிஎப் வரி விதிப்பு திட்டம் குறித்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு ஆராய்ந்தது. இதையடுத்து வரி விதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது’’ என்றார். அதே நேரம், தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் முதிர்வின்போது திரும்ப பெறும் 40 சதவீத தொகைக்கு வரி விலக்கு தொடரும் என்றார். இதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.
No comments:
Post a Comment