மாணவர் வாயிலாக அளிக்கப்பட்ட ஓட்டளிப்பு உறுதிமொழி படிவத்தை, பெற்றோர் பலர், கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்; வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது என்ற பெற்றோரின் கேள்வியால், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கோடு, தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதற்கென, பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி குழந்தைகள் மூலம் ஓட்டளிப்பு உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டு, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிவத்தில் கையொப்பம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகளிடம், ஓட்டளிப்பு உறுதிமொழி படிவம் வழங்கி, பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி, ஆசிரியர்களிடம் தர வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது."வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது?' என கேட்டு, பெற்றோர் பலர், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாமல், குழந்தைகள் வாயிலாக, பள்ளிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதுபோன்ற பெற்றோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறுகையில்,
"படிவங்களை ஜெராக்ஸ் எடுப்பது, "ஸ்பைரல்' செய்வது என, 3,000 ரூபாய் வரை செலவாகிறது; ஆசிரியர்கள், தங்களது சொந்த பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் கமிஷனே, ஒவ்வொரு மாணவருக்கும் தலா, மூன்று படிவம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என, அனைவரையும் வற்புறுத்தக்கூடாது' என்றனர்.
No comments:
Post a Comment