முதன் முதலாக, சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிந்ததும், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் வரை, இரண்டு நாட்கள் தேர்தல் கமிஷன் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், ஓட்டுப்பதிவை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக உள்ள, ஓட்டுச்சாவடிகளை தேர்வு செய்து, அவற்றுக்கு மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில், ஓட்டுச் சாவடி அலுவலர், ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இடம் பெறுவர். இவர்கள், ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, ஓட்டு போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவர். தற்போது, சென்னையில் உள்ள கல்லுாரிகளில், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்றவற்றிலும், மாணவ, மாணவியரிடம், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.அரசு கேபிள் 'டிவி' மூலம், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர் களின் தேர்தல் பிரசாரம், மே, 13ம் தேதி மாலை நிறைவு பெறும். அதன்பின், இரண்டு நாட்களுக்கு, தேர்தல் கமிஷன் சார்பில், ஆட்டோவில் ஒலிபெருக்கி பொருத்தி, ஓட்டு போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment