பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. முறைகேடுகளை தடுக்க 6600 பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 12, 053 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 564 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகள் மூலம் மொத்தம் 53 ஆயிரத்து 159 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக சென்னை மாவட்டத்தில் மட்டும் 209 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 041 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, திருச்சி, பாளையங்கோட்டை, சென்னை புழல் சிறையில் உள்ள 250 கைதிகளும் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.
தமிழ் வழியில் படிப்போர் 6 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுடன் டிஸ்லெக்ஸ்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் என 3420 பேருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 6600 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9 மணிக்கே தொடங்கும்.
No comments:
Post a Comment