ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். "எழுத்தறிவித்தவன் இறைவன்', "மாணவர்கள் கல் என்றால் ஆசிரியர்கள் சிற்பிகள்' போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப் படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய் தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவே தான் ஆசிரியர்கள் இரண்டாவது தாய் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர் களுக்கு உண்டு.
மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி. உலகில் ஆசிரியர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆசிரியர் தினம் மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பை உணர்த்தும் விதத்திலும், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் இத்தினம் வலியுறுத்துகிறது. சிறந்த ஆசிரியரின் பண்புகள் மாணவர்களை ஈர்ப்பது மட்டுமன்றி, அவர்களது மனதில் அப்படியே பதிகிறது. ஆசிரியரே மாணவனுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். தோன்றியது எப்படி:
சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன் 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை தனியாக கொண்டாடுவதை விட அதை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் தனக்கு பெருமை எனக் கூறினார். ஆசிரியர் தொழிலில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவர் இவ்வாறு கூறினார். இதன் காரணமாக அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் "சிறந்த ஆசிரியர் என்பவர் சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவர்களின் மனதில் நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்றார்.
ஆசிரியரும் ஒரு மாணவரே:தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி சிறப்பானது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல. மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதியே விருது வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.
No comments:
Post a Comment