தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எந்த நோக்கத்துக்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பாரதி என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் கேட்கும் தகவல்களை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், எதிர் மனுதாரர் கோரிய அனைத்துக் கேள்விகளுக்கும் ஏற்கெனவே பதில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தகவலறியும் உரிமைச் சட்ட விதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலும், நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 53 மனுக்களை பாரதி தாக்கல் செய்துள்ளார். அவருக்குத் தேவையான தகவல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டதால், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி என். பால்வசந்தகுமார், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவலைக் கோரும் நபர் அந்தத் தகவல் தன்னுடைய சொந்த நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த இரண்டு காரணங்களுக்காகவும் தகவல் கோரும் ஒருவர், அந்தக் காரணம் தொடர்பான குறைந்தபட்ச விவரங்களையாவது அளிக்க வேண்டும். எந்த நோக்கத்துக்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரிவிக்காமல் தகவல் கோருவதை ஒரு வழக்கமான நடைமுறையாக மாற்ற முடியாது. எனவே, மத்திய தகவல் ஆணையத்தின் தவறான இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டு, நீதிபதிகள் தாமாக முன்வந்து மீண்டும் பரிசீலனை செய்வதற்காகப் பட்டியலிட உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்து நீதிபதிகள் மீண்டும் பிறப்பித்த உத்தரவு: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருபவர்கள் எதற்காகத் தகவல் கோரப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிவிக்கத் தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 6(2)-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டப் பிரிவை கவனத்தில் கொள்ளாமல், தகவல் கோருபவர்கள் எதற்காக அந்தத் தகவல் கோரப்படுகிறது என்ற குறைந்தபட்ச காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என கடந்த 17-ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. அந்தக் கருத்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தகவல் பெறுபவர்கள், எதற்காகத் தகவல் கோரப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற வரிகளை நீக்கி உத்தரவிடுகிறோம். எனவே, இந்த வரிகள் நீக்கப்பட்ட புதிய உத்தரவு நகலை வெளியிடுமாறு உயர் நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறோம் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment