அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், கல்வியில் பின்தங்கிய 35 ஆயிரம் பேருக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இந்தச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும்.
இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்புக்கு வரும் மாணவர்களில் பலர் அடிப்படை மொழியறிவு, கணித அறிவு கூட இல்லாமல் உள்ளனர். கல்வியில் பின்தங்கியுள்ள 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது: இந்தச் சிறப்பு வகுப்புகளில் மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம், தமிழ், ஆங்கில மொழித் திறன்கள், புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும். இதன்மூலம், மாணவர்கள் அனைவரும் அடிப்படைக் கற்றல் திறன்களைப் பெறுவதோடு, 10-ஆம் வகுப்பிலும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிக்க உதவியாக இருக்கும்.
காலாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அந்தத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் 35 ஆயிரம் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தச் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment