பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் வியாழக்கிழமையும் (செப்.4), வெள்ளிக்கிழமையும் (செப்.5) விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த மையங்களின் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர் ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500-ஐ செலுத்த வேண்டும். ஏற்கெனவே பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அந்த மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை எடுத்துவர வேண்டும். நேரடித் தனித் தேர்வர்களாக எழுதுவோர் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒரு வகுப்பின் மாற்றுச் சான்றிதழின் நகல் அல்லது எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்
. அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று சிறப்பு மையங்களுக்கு எடுத்து வர வேண்டும்.
No comments:
Post a Comment