தமிழகத்தில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் முறையில் மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தகுதிகாண் முறைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்.4-இல் உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை செயலர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, தகுதிகாண் முறை சரியானதல்ல என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தகுதிகாண் முறை சரியானதுதான் என உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி எழுவதால், தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment