தமிழ்நாட்டில் மார்ச் மாதம் பிளஸ்–2 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முடிந்ததும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகளை 19 லட்சம் மாணவ–மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் எந்த வித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பது கருதி மாணவர்களின் விடைத்தாள்களில் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டு விடைத்தாள் புத்தகம் போல வழங்கப்பட உள்ளது. அதுபோல மாணவர்கள் விடைத்தாளில் அவர்களின் தேர்வு பதிவு எண், பெயர் எதுவும் எழுதத்தேவை இல்லை. விடைத்தாளின் முன்பகுதியில் ஒரே வித ரகசிய குறியீடு 4 இடங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது
. மேலும் தேர்வு நடக்கும் போது எந்த வித முறைகேடும் நடந்து விடக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், இணை இயக்குனர்கள் ராஜராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தேர்வு அறையில் 20 பேர்கள் மட்டும் அதன் ஒரு பகுதியாக தேர்வு அறைகளில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஒரு பள்ளியில் 400 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் ஒரு அறைக்கு 20 பேர் வீதம் 20 அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும்.
மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு அமைக்கும்போது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நேரடியாக பறக்கும்படைகள் இதை கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பறக்கும் படைகளையும் நேரடியாக தேர்வுத்துறை இயக்குனரே நியமிக்க உள்ளார். தேர்வு அறை கண்காணிப்பாளர்களையும் அவ்வாறே நியமிக்கபட உள்ளனர். அதுபோல விடைத்தாள் திருத்தும் பணியிலும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் நியமிக்கும் ஆசிரியர்கள்தான் ஈடுபட உள்ளனர். இதனால் எந்த வித முறைகேடும் நடக்காமல் தேர்வு நடத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment