மனுவில் கூறி இருந்ததாவது:– நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 1991–ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் என் மீது 35 குற்றச்சாட்டுகளை கூறி 29.6.2000 அன்று பணி நீக்கம்(டிஸ்மிஸ்) செய்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். பணி இடைநீக்கம் பணி நீக்க உத்தரவை 11.12.2009 அன்று ரத்து செய்த ஐகோர்ட்டு, என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விதிகளுக்கு உட்பட்டு புதிதாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்த போதிலும் பள்ளி நிர்வாகம் என்னை பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால், ஐகோர்ட்டில் அப்பீல் செய்தேன். அந்த அப்பீல் மனு விசாரணைக்கு வந்த போது, 8.10.2012 அன்று என்னை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை தலைமை ஆசிரியராக பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மீண்டும் பணி வழங்க உத்தரவு இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:– ‘‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டப்படி 2 மாதத்துக்குள் மேல் உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய முடியாது. உரிய காரணத்தை தெரிவித்து பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்க அதிகாரம் உள்ளது. மனுதாரரை பொறுத்தமட்டில் அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்கவில்லை.
8.10.2012 அன்று மனுதாரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்காததால் 8.12.2012 அன்றுடன் அவரது பணி இடைநீக்கம் முடிவு பெறுகிறது. எனவே, மனுதாரரை தலைமை ஆசிரியராக பணியாற்ற பள்ளி நிர்வாகம் உடனடியாக அனுமதிக்க வேண்டும். 9.12.2012 முதல் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.’’ இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment