ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்களையும், டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி, அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என, ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசின் முடிவு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2,448 ஆசிரியர்கள், வரும், 14ம் தேதி நடக்க உள்ள, டி.இ.டி., மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment