தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்றிய அளவில் முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பட்டியலின்படி வெளிப்படை தன்மையுடன் கலந்தாய்வு முறையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையில் நேற்று நடக்க இருந்த பதவி உயர்வுக்கான கலந்தாய்வை திடீரென ரத்து செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் விவரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து உடனடியாக கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிட்டார். இந்த பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்டு பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment