பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு அகமதிப்பீடு மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவேற்றும்போது கூடுதல் விவரங்களைச் சேர்ப்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்போது கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு நீண்ட நாள்கள் வருகை புரியாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏதேனும் ஒரு மாணவருக்கு வருகைப்பதிவு, உள்நிலைத்தேர்வு, ஒப்படைவு ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் இருந்தால் அந்த இடத்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டதாக பதிவு செய்ய வேண்டும்.
மொழிப்பாட விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, விலக்கு பெற்ற மொழிப் பாடத்துக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் ஜீரோ என பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உடனடியாக அனுப்பி வைத்து உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment