இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 30, 2018

சிபிஎஸ்இ மறு தேர்வு: பிளஸ் 2 பொருளாதாரப் பாடத்துக்கு நாடு முழுவதும் ஏப்ரல் 25-ம் தேதி தேர்வு: 10-ம் வகுப்புக்கு முடிவாகவில்லை


சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நாடு முழுவதும் பிளஸ் 2 பொருளாதாரப் பாடத்துக்கு ஏப்ரல் 25-ம்தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 10-ம்வகுப்பு கணிதம் பாடத்துக்கு மறுதேர்வு டெல்லி என்சிஆர் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் மட்டும் ஜூலை மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம்வகுப்பு கணிதம், பிளஸ் 2 பொருளாதாரம் பாடத்தின் கேள்வித்தாள் கடந்த செவ்வாய்க்கிழமை வாட்ஸ் அப்பில் வெளியானது. இதையடுத்து, சிபிஎஸ்இ அமைப்பு மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினார்கள். சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற செயலுக்கு மாணவர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும், மீண்டும் மறு தேர்வு ஏன் எழுதவேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்கள்.

இதனால், பிளஸ் 2, 10-ம் வகுப்புக்கு எப்போது தேர்வு நடக்கும் என்ற தெளிவில்லாத சூழல் நீடித்து வந்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சிபிஎஸ்இ தேர்வு நடத்திய விதத்தில் தவறு நடந்துவிட்டது. 10-வகுப்பு கணிதம்(கோட் 041) பாடத்துக்கான கேள்வித்தாள் டெல்லி, ஹரியாணா, என்சிஆர் பகுதிகளில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் வெளியாகி இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஆதலால், டெல்லி, என்சிஆர், ஹரியாணா மாநிலங்களில் மட்டும் வரும் ஜூலை மாதம் 10-ம் வகுப்பு கணிதம் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும். இதற்கான தேதிகள் அடுத்த 15 நாட்களில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

ஆனால், பிளஸ் 2 பொருளாதாரம் (கோட் 030) பாடத்துக்கான வினாத்தாள் நாடு முழுவதும் வெளியாகி இருக்கிறது. ஆதலால், இந்தப் பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும். இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறாது. ஏற்கெனவே தேர்வு மையம் எங்கு இருந்ததோ அதே இடத்திலேயே இந்த தேர்வு நடைபெறும், பழைய அனுமதிச்சீட்டையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்ற தேர்வுகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அது வழக்கம் போல் நடைபெறும் மறு தேர்வுகளால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் எந்தவிதமான தாமதமும் ஏற்படாது. வழக்கம் போல் மே மாதம் இறுதியில் நடைபெறும்.

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சிபிஎஸ்இ தலைவர் அனிதா அகர்வால் மீது விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமானவர்கள் மீதும், பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த விதமான விசாரணையில்லாமல் இப்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது.

இந்த கேள்வித்தாள்கள் எப்படி வெளியாகின என்பது குறித்து இன்னும் தெளிவான விடை இன்னும் கிடைக்கவில்லை. முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் இனி விசாரணை நடத்தப்படும். எங்களுடைய கவலை மாணவர்கள் எந்த சூழலிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். குழந்தைகளின் நலனே முக்கியம்'' அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.

No comments:

Post a Comment