தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காகப் பதிவு செய்தவர்களில் 2,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தமிழகத்தில் 9 மையங்களில் தங்கும் விடுதியுடன் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசின் சார்பில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் 412 இலவசப் பயிற்சி மையங்களைத் தொடங்கி நடத்தி வந்தது.
இம்மையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 72,000 பேர் சனி, ஞாயிறுக்கிழமைகளில் பயிற்சி பெற்று வந்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வை முன்னிட்டு இப்பயிற்சி தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 8,233 மாணவர்களில் 2,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்கள் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உள்பட இடங்களில் உள்ள 9 கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு நேரடிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. வரும் ஏப்.5-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், நீட் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைக் கருத்தில்கொண்டு ஏப்.5 -ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு 2,000 மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சியும், 6,233 மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையிலும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி முதலில் நான்கு இடங்களில் மட்டுமே நடத்தத் திட்டமிட்டப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி 9 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்ததும் ஏற்கெனவே தங்களது பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியைத் தொடரலாம் என்றனர்.
No comments:
Post a Comment