தமிழக பட்ஜெட்-பள்ளிக் கல்வித்துறை
2018-19-ஆம் ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுபோல பல்வேறு திட்டங்களுக்காக 2018-19 நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் ரூ. 27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்:
2018-19 ஆம் ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ள 33,519 குழந்தைகளை 2018-2019-ஆம் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி: பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 333.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீருடைகள், சைக்கிள் வழங்கும் திட்டங்களுக்கு ரூ. 1,600 கோடி: பள்ளி மாணவர்களுக்கு நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், சைக்கிள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களுக்காக 2018-19-ஆம் ஆண்டில் ரூ.1,653.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான ரூ. 5000 ஊக்கத் தொகைத் திட்டத்துக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ. 313.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மடிக்கணினி திட்டத்துக்கு ரூ. 758 கோடி: பள்ளிகளில் கற்பிக்கும் முறையை மேம்படுத்தும் வகையில் இணையவழி மூலம் கற்கும் வகுப்பறைகள் ஏற்கெனவே 770 பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டில் 3,090 உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளிலும் ரூ. 462.60 கோடி செலவில் 10 முதல் 20 கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ.1,750 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்துக்கு ரூ. 850 கோடியும் இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை' திறம்படச் செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ. 27,205.88 கோடி: பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களுக்காக 2018-19-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ. 27,205.88 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
No comments:
Post a Comment